நாட்குறிப்பு - 09.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

மெல்ல மெல்ல தூசி போல தூரல் தரையை தொட்டுக்கொண்டிருந்தது. நானும் திவ்யாவும், ஷெல்டருக்கு சென்றோம் போகின்ற வழியிலேயே என்னை திட்டியவர்கள் என்னை கடந்தார்கள். முன்பெல்லாம் அவர்களை பார்த்து புன்னகைப்பேன். திட்டு வாங்கியப் பிறகு புன்னகை வரவில்லை. ஒதுக்கம் தான் வந்தது. சரி போகட்டும் எல்லாம் சரியாகிவிடும்.

அடுத்து என்ன?

மூக்குக்கு மேலே சிராந்து எலும்பு தெரிந்த நாய் ஒன்றை பார்த்தேன். அது என்னை கண்டுக்கொள்ளாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த முறை வீடியோ எடுக்க என்னிடம் மொபைல் இல்லை.

சில நேரம் இல்லை... இல்லை பல நேரம் மொபைலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன். 

மணி என்னை விரட்டினான். அவன் மீன் விற்பவர்களின் நாய். அவனின் காதினையும், வாலையும் அறுத்திருக்கிறார்கள். இது ஏதோ வழக்கமாக இருந்தாலும், பாவம் அவனுக்கு வலித்திருக்கும். அவன் மனிதர்களை கண்டால் பயப்படுவான். 

இரண்டு ட்யுமர் வந்த பெண் நாய்களை பார்த்தேன். இப்போது அருணாச்சலா காப்பகத்திற்கு போன் செய்ய முடியாது. விஷ்வா சாரை பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டது. சில நேரம் அந்த நிறுவனம் முன்பு இருந்தது போல அன்னியோன்யமாக இல்லாமல், அந்நியமாகத் தெரிகிறது.

நேற்று அங்கு சென்றிருந்த போது, மாட்டிற்கு ஆபரேஷன் என்று மேனேஜர் ராஜா கூறினார். மாட்டிற்கு ஆபரேஷன் செய்கிற அளவிற்கா நாடு வளர்ந்துவிட்டது என்று எண்ணம் எழுந்தது. என்ன ஆபரேஷன் என்று கேட்கவில்லை. முன்பு செப்டிக் ஆனா மாட்டிற்கு டாக்டர் மகேஷ் மருத்துவம் பார்த்தது நினைவிற்கு வந்தது. நல்ல சகிப்புத் தன்மை அவருக்கு, அதே மனிதர் குரங்கு விஷயத்தில் பயந்தது மனதிற்கு நெருடலாக இருந்தது.

மனிதர்கள்    ஒவ்வொரு நிகழ்விலும்  வெவ்வேறு முகங்களை காண்பிக்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் எத்தனை முகங்கள். எனக்கும் கூட அத்தனை முகங்கள் உண்டு.

இன்று லூசி ஒரு பெண்ணின் மீது தாவி ஏறினாள். அந்த பெண் என்னை திட்டிவிட்டு போனாள். திட்டுவாங்குவது வாடிக்கையாகிவிட்டது எனக்கு. இப்படியிருக்க திடீரென ஒரு எண்ணம் முழு நேர எழுத்தாளர் ஆனால் என்ன என்று கேள்வி எழுப்பிய மனதிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

இன்று நான் சாத்தனூரில் உள்ளவர்களுக்கு, பிஸ்கட் கொடுக்கவில்லை. அது கொஞ்சம் வருத்தம் என்றாலும்,  எல்லா சூழலும் சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். 








Comments

Popular posts from this blog

நாட்குறிப்பு - 7.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

நாட்குறிப்பு - 10.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)