நாட்குறிப்பு - 17.12.2023 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)
நான் இன்று கார்த்திகாவை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலா காப்பகத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக செல்ல ஆயத்தமானேன். என் துர் அதிர்ஷ்டம் கருப்பன் அவிழ்த்துக்கொண்டான். அவனை என் வீகோவில் துரத்தி பிறகு திவ்யாவின் உதவியுடன் கொண்டுவந்து ஆட்டோவில் கட்டிவிட்டு, கார்த்திகாவை ஒரு ஒயர் கூடையில் போட்டு மெல்லிய கம்பியால் கட்டிக்கொண்டு, நான் திருவண்ணாமலை நோக்கி பயணத்தை துவங்கிய போது மணி 10.13. காலை.
Karthiga
அருணாச்சலா மருத்துவமனையின் பார்வை நேரம் காலை 9.00 முதல் 11.00 மணி வரையில் தான் . நான் பதினோறு மணிக்குள் அங்கு இருக்க வேண்டும். இன்று காலை நான் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. வழியில் காஃபி அருந்தவும் நேரம் இல்லை. இடையில் எங்கும் நிற்காது பயணத்தைத் தொடர்ந்தேன்.
திருவண்ணாமலை மலைச் சுற்றும் பாதை செல்லச் செல்ல கிரிவலப்பாதையில் மக்கள் கூட்டம் சாரி சாரியாய்.
இன்று மார்கழி 1
எனக்கு கிரிவலம் செய்யவெல்லாம் நேரம் இல்லை. அதே சமயம் நடந்து செல்லும் வாய்ப்பும் இல்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளி.
நான் நாய்குட்டிகளை கடந்த ஐந்து வருடமாக பராமரித்து வருகிறேன். சாலையில் விபத்தில் சிக்கி இறக்கும் வாய்ப்புள்ள மற்றும், பார்வோவால் பாதிக்கப்பட்ட, நோஞ்சானாக உள்ள நாய்க்குட்டிகளை எடுத்து அருணாச்சலா மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் தடுபூசிகள் போட்டு முடிக்கும் போது நாய்கள் வளர்ந்திருக்கும்.
அதுவுமில்லாமல் தெருநாய்களை யாரும் கிராமத்தில் தத்தெடுப்பதில்லை.
நல்ல ஆரோக்கியமான நாய்குட்டிகளை தான் மக்கள் விரும்புகிறார்கள். நோய்வாய்பட்ட நாய்குட்டிகளை யாரும் பராமரிக்க விரும்புவதில்லை. ஆவலாக நாய்குட்டிகளை சிறார் கேட்கிறார்கள். கொடுப்பதற்கு எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. சிலர் கழுத்தில் கயிறை கட்டி தரத்தரவென்று இழுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
அதனால் நான் சிறார்களிடம் நாய்குட்டிகளை கொடுக்க விரும்பவில்லை. அதே சமயம் நாய்குட்டிகள் குழந்தைகளுக்கு நல்ல தோழன். எனக்கும் நாய்குட்டிகள் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களை மிகவும் நேசிப்பதினாலேயே அவர்களை கையில் எடுத்துக்கொண்டேன். உண்மையில் எங்கள் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை எத்தனை கிலோமீட்டர் என்று தெரியவில்லை. கூகுளில் தேடியதில்38 கிலோமீட்டர் என்று கூறியது. சில சமயம், என் வீகோவிலும் பலநேரம் ஆட்டோவிலும் நாய்குட்டிகளை திருவண்ணாமலை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இதற்கு நண்பர்களின் உதவியை நாடவேண்டியிருந்தது. சிலர் உதவினார்கள் அதில் முதன்மையானவர் விமலி செல்வம்.
Vimali Selvam
நாய்களுக்கு உணவளிக்கவும், நாய்களுக்கு தடுப்பூசி போடவும், நாய்களுக்கான கூடமைக்கவும், அதிக தேவைகள் உடையவளாக இருக்கிறேன். பணத்தேவை மற்றும் உடன் பணியாளர் தேவையும் அதிகமாகவே இருக்கிறது. உடன் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுத்தாகவேண்டுமே.
முதன் முதலாக ஒரு பணியாளர் நம் அறக்கட்டளையில் இணைந்துள்ளார். அவர் பெயர் தேன்மொழி.
கடந்த ஐந்து வருடங்களில் திவ்யாவும், அருள்ராஜூம் தன்னார்வலராக பணியாற்றி நாய்குட்டிகளுடனான என் பயணத்தில் பெரும்பங்காற்றினார்கள். அவ்வப்போது அருள்மொழி(என் மகள்) ஜாய்செல்வகுமாரி (எனது தாயார்) பெரும் உதவிகள் செய்து, நாய்களுக்கு உணவு அளிக்க அரிசி மற்றும் இறைச்சி கொடுத்து உதவி வருகிறார்.
ஆரம்ப நாட்களில் நான் இரக்கத்துடன் நாய்குட்டிகளை எடுத்து, பின் அறக்கட்டளை செயல்பாடுகளில் ஒன்றாக்கி தொடர்ந்து நாய்களோடு பயணிக்கிறேன்.
பாருங்களேன் ஏதோ எழுத வந்து சிந்தனை ஓட்டம் வேறு எங்கோ சென்றுவிட்டது.
நான் கார்த்திகாவை அழைத்துக்கொண்டு தடுப்பூசி போட அருணாச்சலா நாய்கள் மருத்துவமனைக்கு சென்று வெளியிலேயே நிற்பேன். ராஜாதான் நாய்குட்டியை கொண்டு போய் தடுப்பூசி போட்டு என்னிடம் கொண்டு வந்து தருவார். சில நேரம் திவ்யாவும், திவ்யா வராத நாட்களில் அருள்ராஜூம் (சகோதரர்) உடன் வருவார்கள்.
இவர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த பணியை நான் செய்திருக்க முடியாது. இனி வரும் நாட்களில் செய்யவும் முடியாது.
ஆரம்ப நாட்களில் என் அக்கா மகன் நான் பெறாத பிள்ளை மார்ஷல் எனக்கு பெரும் உதவியாக இருந்திருக்கிறார். அதிகம் பேசி, நேரம் கெட்ட நேரத்திலும், என்னுடன் நாய்குட்டிகளுக்காக அருணாச்சலா மருத்துவனைக்கு வந்திருக்கிறார்.
அநேகரால் தாங்கப்பட்டு சமீபகாலமாக நாய்களுக்காக செயலாற்றி வருகிறது Heart Beat Trust.
Heart Beat Trust என்றால் நீ மட்டும் தான் என்கிறாள் என் மகள்.
இல்லை....
ஹார்ட்பீட் டிரஸ்ட் என்றால் சக உயிரினங்களுக்காக தவித்துப்போகிற அனைவரையும் உள்ளடக்கியதே இந்த நிறுவனம்.
எங்கள் கிராமத்திலேயே விலங்குகளுக்காக எல்லா வசதிகளுடனும் ஒரு மருத்துவனை இயங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித நேயமிக்க நீங்களும் எனக்கு துணைவருவீர்கள் என்று நம்பவும் செய்கிறேன்.
வழிபயணத்தில் கேட் என்ற இடத்தில் லாவண்யா பேக்கரியில் ஒரு காஃபியோடு வீடு வந்து சேர்ந்துவிட்டேன். கையிருப்பு எதுவும் இல்லை. நாளையோ நாளை மறுநாளோ வேறொருவனையும் மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும். அவன் இரத்தமாக கழிகிறான். ஆனால் உணவருந்துகிறான். இரத்த பேதி நிற்க மருந்து கொடுத்தேன்.
பார்க்கலாம் நாளை எந்தவிதத்தில் மலம் கழிக்கிறான் என்று.
அடிப்படையில் நான் ஒரு Blogger தான்.
வெகுநாட்கள் கழித்து blog எழுதத் துவங்கியுள்ளேன்.
நாய்களுக்காக எனக்கு உதவி செய்யுங்கள். உங்கள் உதவி எனக்கு தேவையாக இருக்கிறது.
நன்றியும் அன்பும்
தமிழ்ச்செல்வி ஜி.ஜே
Comments
Post a Comment