நாட்குறிப்பு - 20.12.2023 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)
அவனுக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. அவன் ஒரு ஆண்பிள்ளை. நாய்களுக்கு நான் தனித் தனிப் பெயர் வைத்துதான் அழைக்கிறேன். தடுப்பூசி பதிவேட்டிலும் எழுதுகிறேன். சில சமயம் ஐந்து ஆறு குட்டிகள் எனும் போது அது முடியாத செயலாகிவிடுகிறது. அவன் மலம் சாதாரணமாக கழிக்கிறான். அவனைத் தடுப்பூசி போட அழைத்துச்செல்லவேண்டும்.
அவன்
நீங்களாவது
ஒரு பெயர் சொல்லுங்கள். அப்படியே வைத்துவிடுகிறேன். பெயர் வைப்பது அத்தனை இலகுவாக இல்லை. நிறைய பெயர்கள்
வைத்துவிட்டேன். லொடுக்கு, குறள், வெண்பா, கார்த்திகா, ராம், பூம்பா, கோக்கோ,லச்சு,
நேத்ரா, லூனா, யாழி, தமிழ், ராஜா, புட்டு, கிட்டு, புசுபுசு, ராபர்ட்…
நாய்குட்டிகள்
இறந்தபோதெல்லாம் அழுதேன்.
விபத்தில்
நாய்கள் இறந்த போதும்…
அழகான
ஒரு நாய்குட்டியை பார்த்துவிட்டு வீடு வந்திருப்பேன். அதிகாலை சாத்தனூர் செல்லும் போது
நைந்த தோலாக சாலையில் கிடக்கும். மனம் பதறி போகும். கவனமாக வாகனங்களை ஓட்டுங்களேன்.
மனித குழந்தையைக் காட்டிலும் நாய்குழந்தைகள் அற்புத குழந்தைத் தன்மை கொண்டவைகள்.
எனக்கு
முதன் முதலில் உள்ளூரில் வந்த நன்கொடை ஞானம்
அண்ணா தந்தது. நாளிதழ் விற்பனையாளர். 20ரூபாய்.
அது எனக்கு பெரியத் தொகையாத்தான் தெரிந்தது.
ஞானம் அண்ணா
பழைய
பேப்பர் ஞானம் அண்ணாவிடம் தான் வாங்குகிறேன். நாய்குட்டிகளுக்கு கீழே போட, பழைய பேப்பர்
தேவையா இருக்கிறது. அட்டைபெட்டி எப்பொழுதும் அண்ணாமலையார் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்வேன். சாக்கு பை ஒரு இஸ்லாமியரின் காய்கறி கடையில். நிறைய
தேவைகள் இருக்கிறது. உணவு, பயணச்செலவு, இதரச்செலவுகள் என பணத்தேவை அதிகரித்தவண்ணம்
தான் இருக்கிறது. போதுமான இடவசதியின்மையும், உதவியாளர்களை பணி அமர்த்த இயலாமையும்,
நாய்குட்டிகளை அப்படியே சாலையில் விட்டுவிட வேண்டியதாக இருக்கிறது. நிறைய நாய்கள் வியாதிப்பட்டு
வயிறு ஒட்டி, வாயில் நுரைத் தள்ள கிடக்கும் பொழுது மனத் வேதனைப் படுகிறது. நாய்களின்
எண்ணிக்கை அதிகம். நாய்களுக்கான மருத்துவமனைகள் குறைவு தான்.
லூசி
குட்டிப் போட முடியாமல் தவித்த போது நான் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி
(1962) ற்கு தொடர்பு கொண்டேன். நாய்களுக்கான எந்த மருந்தும் அவர்களிடம் இல்லை என்று
கூறிவிட்டார்கள். நாய்கள் கால்நடையில் சேர்த்தி இல்லையா? பணத்தோடு தொடர்புடைய உயிரினங்களை
மாத்திரம் தான் கவனத்தில் கொள்ளுமா அரசு.
இந்த அறக்கட்டளையை
நான் பதிவு செய்த போது என்னிடம் பணம் இல்லை. ஒரு லட்சிய கனவு இருந்தது. இந்த சமுதாயத்திற்கு
ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கனவு.
நான் கையில் எடுத்த
குட்டிகளை மீண்டும் தெருவில் நிர்கதியாக விட எனக்கு மனம் இல்லை. நான் தெருநாய்குட்டிகளை
வளர்க்க விரும்புகிறேன். பாதுகாக்க விரும்புகிறேன்.
எல்லாம் சாலையில்
இருந்து எடுத்த குட்டிகள். திரும்பவும் சாலையில் விட்டால், ஏதோ ஒரு வாகனம் கொன்று போகிறது.
மனித நேயமற்றவர்களா மனிதர்கள்? எங்கள் கிராமத்தை சுற்றிலும், கால்நடைகளும் நாய்களும்
அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. சாத்தனூரில் கால்நடைமருத்துவமனையும் இருக்கிறது. ஆனால்
அங்கு நாய்களுக்கான தடுப்பூசிகள் இல்லை.
தெரு நாய்களின்
எண்ணிக்கையை குறைக்க விரும்பும் அரசாங்கம், தெருநாய்களின் நலனில் அக்கறைக்கொள்ளுமா
என்ன?
நாய்களுக்காக எனக்கு
உதவி செய்யுங்கள். பசி எல்லா உயிரினங்களுக்கும்
பொதுவான உணர்வு.
பசியின் வேதனை
எனக்கு தெரியும். மனிதனுக்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும். நாய்கள் மாத்திரம்
என்ன செய்யும்?
பேரன்புடன்
தமிழ்ச்செல்வி
ஜி.ஜே
Comments
Post a Comment