நாட்குறிப்பு - 17.02.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)
இன்னும் நான் சோர்வில் இருந்து மீளவில்லை.
எனக்குள் அநேக கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த நாய்க்குட்டி இறந்துவிட்டதாக
கூறினார்கள். எனக்குள் குற்ற உணர்வு எழுந்தது. அதை நான் என்னுடனேயே வைத்திருந்திருந்தால்,
அவள் உயிரோடு இருந்திருப்பாளோ என்ற எண்ணம் மேலோங்க, இரவில் உறங்க முடியாமல் தவித்தேன்.
அழுதேன். எப்பொழுது இறந்தாள் என்றே தெரியவில்லை. தொட்டி அருகே இருந்த தண்ணியில் விழுந்து
இறந்துவிட்டிருந்தாளாம். புழு மேய்ந்ததாம். மார்ஷல் தான் வந்து என்னிடம் கூறினான்.
அன்பு ராஜ் தான் தொட்டியை சுத்தப்படுத்தினான் என்று வீரா மாமா கூறினார். கட்டி வைத்திருந்த
தமிழ் அவிழ்த்துக்கொண்டு துரத்தியதால் தான் இது நேர்ந்தது என்று கூறினார். ஆற்றுப்படுத்த
துணை தேவையாக இருந்தது. எலிகளை வேடிக்கைப் பார்த்தேன். இரவில் உடைந்த ஓட்டு வழியே எட்டிப்
பார்த்த புளிய மரத்தாளே துணையாக நின்றாள். எனக்கு ஷெல்டரை முடிக்க வேண்டும். நிறைய
நாய்க்குடிகளை எடுத்து வளர்க்க வேண்டும். சாலையில் எலும்புக் கூடுகளாய் நிற்கும் நாய்குட்டிகளை
பார்க்கும் பொழுது, கண்ணில் இரத்த ஆறே ஓடுகிறது. நான் ஏதாவது செய்ய வேண்டும்.
நேற்று காலை (24.01.2024) சாத்தனூர் சென்று
திரும்பும் வழியில் ஒரு கருப்பு ஆண் நாய்குட்டியை சாலையில் பார்த்தேன். அதன் ஒன்றை
கால் உடைந்ததை போல் தொங்கிக்கொண்டிருந்தது, நான் கோம்பியை பெட்ரோல் பங்கில் இருந்து
எடுத்த போது, கோம்பியும் ஒற்றைக் கால் உடைந்ததை போல் தொங்கிக்கொண்டு தான் இருந்தாள்.
அவள் கெனைன் டிஸ்டம்பர் வியாதியில் பின்நாளில்
இறந்துவிட்டாள்.
17.02.2014
முன்பு எழுதிய பதிவிற்கும், இப்பொழுது எழுதிய
பதிவிற்கும் எத்தனை நாள் வித்தியாசம்…
யாராவது உதவிக்கு வந்துவிடமாட்டார்களா என்று
என்று மனம் ஏங்குகிறது. பணியாளர் தேவை அதிகரிக்கிறது. எங்கள் ஊர் (செ. சொர்ப்பனந்தல்
) இளைஞர்கள் எனக்கு உதவினால் பேரானந்தமாக இருக்கும். எத்தனைக்கும் அதிகமான அன்பான அறிவான, உதவும் மனப்பான்மை கொண்ட
இளைஞர்களை அனுதினமும் மனக்கண்ணில் காண்கிறேன். அது விரைவில் நிறைவேறும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் பென்சிங் போட வேண்டும்.
ஷெல்டர் அமைக்க வேண்டும். JD. சோமசுந்தரம் கால்நடை பராமரிப்புத்துறை, மாறுதலாகி சொந்த
ஊருக்கே சென்றுவிட்டார் என்பது பேரதிர்ச்சி. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று மனதை
தேற்றிக்கொண்டேன். ஏன் நாய்க்குட்டிகளுக்கு மஞ்சள்காமாலை நோயால் இறந்து போகிறது என்று
தெரியவில்லை. நாய்களின் நோய்கள் குறித்த மருத்துவ நூல்களை வாசிக்க வேண்டும். டாக்டர்.
கிஷோர் குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடைசியாக மஞ்சள் காமாலை வந்த நாய்க்குட்டிக்கு
Tablet.doxycyline 100 mg கொடுத்து வருகிறேன். மேலும் அவனுக்கு கீழாநெல்லி தழையை அரைத்து
ஊத்தினேன். அம்மா தான் பறித்துக்கொண்டு வந்து தந்தார். மருத்துவத்திற்கு பிறகு அவனின்
சிறுநீரின் நிறம் மாறியிருந்ததை கவனித்தேன். தொடர்ந்து மருந்து அளித்து வருகிறேன்.
இன்று திருவண்ணாமலை அருணாச்சலா காப்பகம்
செல்ல உந்துதல் எழுகிறது. எனக்கு ஒரு ஸ்கை வாம் டேப்ளெட் வேண்டும், நாய்களின் கழுத்தில்
கட்ட நாடா வேண்டும். க்ளவுஸ் வேண்டும். அவர்களிடம் கேட்டு வாங்கி வரத்தான் செல்லப்
போகிறேன்.
நான் ஷெல்டர் அமைக்க, நாய்களுக்கு உணவளிக்க
உதவுங்கள்.
உலகம் எல்லா உயிரினங்களுக்கும் ஆனது.
வாழ்த்துகளும் பேரன்பும்.
பின்குறிப்பு:
போனமாத செலவில் சிலிண்டர் தொகையை குறிப்பிட
மறந்தேன். இந்த மாதம் இன்னும் முடியவில்லை.
தமிழ்ச்செல்வி ஜி.ஜே
எங்களுக்கு உதவுங்கள்.
Comments
Post a Comment